வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே, கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நடராஜன், முத்துராமன், பூமி, ராஜா, கணேசன், மலைச்சாமி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எங்கள் கிராமம் விவசாய நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களை உள்ளடக்கியதாகும். பல ஏக்கர் நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக இருந்து வந்தன. இந்த மேய்ச்சல் நிலங்களில் எங்கள் கிராமத்தினர் தங்களின் கால்நடைகளை மேய்த்தனர். அதுமட்டுமல்லாமல் தங்கள் விவசாய நிலங்களில் நெல் அறுவடை செய்து அவற்றை இந்த நிலங்களில் களமாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் எங்கள் கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் சிலர் வந்து தங்கினர். அவர்கள் தொழுநோய் மருத்துவமனையும் நடத்தி வந்தனர்.
அவர்கள் எங்கள் கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். படிப்பறிவு இல்லாத எங்கள் கிராமத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்கள் கிராமத்தில் உள்ள பல ஏக்கர் நிலங்களை தற்போது பட்டா போட்டு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பஞ்சாயத்து நிலங்களுக்கான பட்டாக்களை ரத்து செய்து, அந்த நிலங்களை மீட்டு கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி, மனுதாரர்கள் கூறுவது போல நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிலங்கள் கிரையம் செய்யப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மதுரை காந்தி மியூசியத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.