மகனை கொன்று தம்பதி தற்கொலை

தக்கலை அருகே மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-07-22 18:45 GMT

தக்கலை, 

தக்கலை அருகே மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

என்ஜினீயர்

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மணலி கரைக்கண்டார் கோணத்தில் வசித்து வருபவர் கோபாலன் (வயது 74). கட்டிட காண்டிராக்டரான இவருடைய மகள் ஷைலஜா (35).

இவருக்கும், கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த என்ஜினீயரான முரளீதரன் (40) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முரளீதரன் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு மனைவி ஷைலஜாவையும் அவர் உடன் அழைத்துச் சென்றார். 6 வருடம் கழித்து ஷைலஜா கர்ப்பம் தரித்து அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தை

அந்த குழந்தைக்கு ஜீவா என பெற்றோர் பெயரிட்டனர். தவம் இருந்து பெற்ற குழந்தை என கூறி அந்த குழந்தையை கணவன், மனைவி இருவரும் சந்தோசமாக வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் சில ஆண்டுகள் கடந்த நிலையில் இருவருக்கும் அதிர்ச்சியை தரும் வகையில் குழந்தையின் வளர்ச்சி இருந்துள்ளது. அதாவது ஜீவாவை அபூர்வ நோய் தாக்கியதாக தெரிகிறது. குழந்தை வளர, வளர மனவளர்ச்சி குன்றிய நிலைக்கு ஜீவா சென்றுள்ளார். அவருடைய உடல்நிலையும் மெலிந்தபடியும் சென்றது.

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் முரளிதரன் சொந்த மாவட்டத்திற்கு வந்து குடியேறினார். அங்கு மணலியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மனைவி, குழந்தையுடன் முரளீதரன் தங்கினார். வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார். மேலும் வக்கீலுக்கும் படித்தார்.

புது வீட்டில் குடியேறினர்

பின்னர் மாமனார் எழுதிக் கொடுத்த நிலத்தில் ஒரு வீட்டை முரளிதரன் ஆசை, ஆசையாக கட்டினார். அந்த வீட்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் முரளீதரன், மனைவி ஷைலஜா, ஜீவா (7)வுடன் குடியேறினார்.

சொந்தமாக வீடு கட்டி வசித்த போதும் குழந்தையின் நிலையை கண்டு கணவன், மனைவி இருவரும் அடிக்கடி புலம்பி வந்துள்ளனர். லட்சக்கணக்கில் பணம் செலவழித்தும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளனர். அவர்களுக்கு கோ பாலன் ஆறுதல் கூறி வந்தார்.

கோபாலன் வீட்டுக்கும், மருமகன் குடும்பத்துடன் வசிக்கும் வீட்டுக்கும் சுமார் அரைகிலோ மீட்டர் தான் இருக்கும். இதனால் கோபாலன் தனது பேரனுக்காக பசும்பால் மற்றும் பிரட் வாங்கிக் கொண்டு தினமும் அதிகாலையில் மருமகன் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்த அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் உள்ளே இருந்து வெளியே வரவில்லை. மேலும் மருமகனின் செல்போனை தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை.

3 பிணங்கள்

குடும்பத்தினருடன் மருமகன் அயர்ந்து தூங்கலாம் என நினைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். அதே சமயத்தில் வீட்டில் தொங்கிய பையில் பாலை வைத்து விட்டு சென்றார். பின்னர் மாலை 5 மணிக்கு அவர் மீண்டும் வீட்டுக்கு விரைந்தார். அப்போது அவர் வைத்துச் சென்ற பால் அப்படியே இருந்தது. மேலும் கதவும் பூட்டப்பட்டிருந்தது. இதனால் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என அவர் பதற்றத்திற்குள்ளானார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவின் லாக்கை கம்பியால் உடைத்து கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். மருமகன் முரளீதரன் ஒரு அறையிலும், மகள் ஷைலஜா ஒரு அறையிலும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். பேரன் ஜீவா கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தார்.

மகனை கொன்று தற்கொலை

ஒரே சமயத்தில் மருமகன், மகள், பேரன் ஆகியோர் பிணமாக கிடந்ததை பார்த்து கோபாலன் துடிதுடித்து போனார். கண்ணீர் விட்டு அவர் கதறி அழுதது கல்நெஞ்சையும் உறைய வைப்பதாக இருந்தது.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதய சூரியன், இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சப் -இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக 3 பேருடைய உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜீவாவின் உடல்வளர்ச்சி குன்றியபடி இருந்ததால் அவனை கொன்று கணவன், மனைவி இருவரும் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பிணமாக மீட்கப்பட்ட போது ஜீவாவின் முகத்தை மூடிய நிலையில் பிளாஸ்டிக் கவர் இருந்துள்ளது. மேலும் அந்த கட்டிலில் இருமல் டானிக்கையும் போலீசார் கைப்பற்றினர். இதனால் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக இருமல் டானிக்கை கொடுத்ததோடு, குழந்தையின் முகத்தை பெற்றோர் மூடியபடி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அதே சமயத்தில் சாவதற்கு முன்பு முரளீதரன் எழுதி வைத்த கடிதம் வீட்டில் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 வயது மகனை கொன்று தம்பதி தற்கொலை செய்த சம்பவம் குமரியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்