திண்டுக்கல் கோர்ட்டில் தம்பதி சரண்

மருமகள் கொலை வழக்கில், கோவில்பட்டியை சேர்ந்த தம்பதி திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2022-07-25 17:03 GMT

பெண் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணிநகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பூட்டிய வீட்டுக்குள் கார்த்திகா பிணமாக கிடந்தார். அவருடைய உடலில் காயங்கள் இருந்தன.

அதேநேரம் தங்கராஜ் தலைமறைவாகி விட்டார். இதனால் அடித்து கொலை செய்யப்பட்டதாக கார்த்திகாவின் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் தங்கராஜை கைதுசெய்யும்படி சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

இதை தொடர்ந்து தங்கராஜ், அவருடைய தந்தை மோகன், தாய் பெரியதாய் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த தங்கராஜ் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தம்பதி சரண்

இதையடுத்து தங்கராஜின் தந்தை மோகன், தாய் பெரியதாய் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதனால் மோகன், பெரியதாய் ஆகியோர் திண்டுக்கல் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ரெங்கராஜன் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்களை 29-ந்தேதி வரை சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்