4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

புதுக்கோட்டையில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-03 18:58 GMT

இடைத்தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு பதவி மற்றும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுக்காடு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேலப்பட்டு, அரிமளம் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குடி, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டைமான் ஊரணி ஆகிய 5 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் செங்கீரை ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 21 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணும் மையம்

இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 7 பதவிகளுக்கான வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிற நிலையில், வாக்கு எண்ணும் பணிக்கும் தயாராகுகின்றனர். இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 12-ந் தேதி எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு, தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

இதேபோல அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலப்பட்டு கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும், அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெடுங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கும், செங்கீரை ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குகளும் எண்ணப்படும். மேற்கண்ட 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரைத்தளத்தில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கும் பணியும், அறையில் தடுப்புகள் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்காக மேஜைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்