ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.1 கோடி குத்தகை பாக்கியை வசூலிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை

ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.1 கோடி குத்தகை பாக்கியை வசூலிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-06-30 19:32 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத்தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்று பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாறுதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மான அறிக்கையினை வாசித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு குத்தகைதாரர்கள் ரூ.1 கோடி வரை பாக்கி வைத்து உள்ளனர். அதனை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் உள்வாடகைக்கு விடுவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகரில் அதிகாலையிலேயே தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும். மேலும் வார்டுகளில் எந்த பணிகள் செய்தாலும் கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே பணி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்