பருத்தி பயிர்களில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி

கும்பகோணம் பகுதியில் பருத்தி சாகுபடி செய்துள்ள வயலில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

Update: 2023-06-05 20:56 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் பகுதியில் பருத்தி சாகுபடி செய்துள்ள வயலில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

பருத்தி சாகுபடி

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கோடை வெப்பத்தை சமாளித்து அதிக தண்ணீர் தேவை இல்லாமல் நல்ல மகசூல் தரும் பயிராக பருத்தி இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் பருத்திக்கு அதிகபட்ச விலை கிடைத்ததால் இந்த ஆண்டு கும்பகோணம் பகுதியில் வழக்கத்தை விட அதிக ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பருத்திச் செடி வளர்ச்சி அடைவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டிரோன் மூலம்...

குறிப்பாக செடிகளில் இலை சுருட்டல் கருகல் உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்பட்டு செடிகள் வீணாவதை விட பல்வேறு பூச்சி இனங்கள் பருத்திச் செடிகளை தாக்கி அழித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பருத்திச் செடிகளில் டிரோன் உதவியுடன் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சம்பளம் உயர்வு

இது குறித்து கும்பகோணம் அருகே பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-கடந்த மாதம் பெய்த மழை காரணமாக பருத்திச் செடியில் பூச்சிகளின் உற்பத்தி அதிகரித்து இலை சுருட்டல், இலை கருகல், தண்டு சேதம், போன்றவை ஏற்பட்டு செடிகள் சேதம் அடைந்து வருகின்றன. தற்போது பூச்சி மருந்துகளை தெளிக்க கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விவசாய கூலி ஆட்களுக்கு சம்பளமும் அதிகரித்துள்ளது. மேலும் கூலி ஆட்களை கொண்டு பூச்சி மருந்து தெளிக்கும் போது நேரம் விரயம் அதிகமாகிறது.இதனால் தற்போது டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறையை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் குறைந்த நேரத்தில் பல ஏக்கர் பரப்பளவில் பூச்சி மருந்தை தெளிக்க முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்