கால்நடைகளுக்கு தீவனமாகும் பருத்தி செடிகள்

விலை குறைவு எதிரொலியால் பருத்தி செடிகளை கால்நடைகளுக்கு விவசாயிகள் தீவனமாக்கி வருகின்றனர்.

Update: 2023-08-08 18:45 GMT

முதுகுளத்தூர், 

விலை குறைவு எதிரொலியால் பருத்தி செடிகளை கால்நடைகளுக்கு விவசாயிகள் தீவனமாக்கி வருகின்றனர்.

பருத்தி விலை குறைவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. குறிப்பாக முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் பருத்தி விவசாயம்தான் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், பூச்சி தாக்குதலாலும் பருத்தி விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டது. முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் இந்த ஆண்டு பருத்தியின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாலும், பருத்தி பஞ்சுகளை பறிக்க ஆட்கள் கிடைக்காததாலும் பருத்தி செடிகளிலேயே பஞ்சுகள் காய்ந்து வீணாகி வருகின்றன.

அது மட்டும் இல்லாமல் பருத்தி செடிகளில் காய்ந்து வீணாகி வரும் பருத்தி செடி மற்றும் பஞ்சுகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகின்றனர்.

விவசாயிகள் ஏமாற்றம்

குறிப்பாக முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி, மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், செங்கற்படை கீழத்தூவல், மேலச்சிறுபோது, சவேரியார் பட்டினம் இளஞ்செம்பூர், சடையனேரி உள்ளிட்ட பல கிராமங்களிலும் உள்ள வயல்வெளிகளில் பருத்தி செடிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்து வருகின்றன.

கடந்த ஆண்டு 1 கிலோ பருத்தி பஞ்சு ரூ.120 வரை விலை போன நிலையில் இந்த ஆண்டு பருத்தி பஞ்சு விலை ஆரம்பத்தில் ரூ.90-க்கு விலை போனாலும் தற்போது ஒரு கிலோ ரூ.40 என இதுவரை இல்லாத அளவுக்கு விலை குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்