கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும்
நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொள்ளிடம்:
நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பருத்தி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இந்த ஆண்டு சுமார் 5500 எக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த அதிகமான மழையின் காரணமக நெற்பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்து அறுவடை பணிகள் தள்ளிபோனது. இதனால் உளுந்து, பயறு விதைப்பு பணிகளும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்தனர்.
கடந்த ஆண்டு சுமார் 2 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பருத்தி நல்ல விலைக்கு ஏலம் போனதால் போதிய லாபம் கிடைத்தது. எனவே இந்த ஆண்டும் பருத்திக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் உளுந்து, பயறு விதைப்பை குறைத்து அதிக நிலப்பரப்பில் கொள்ளிடம் பகுதி விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில இடங்களில் பரவலாக பருத்தி அறுவடை பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் பருத்தி கொள்முதல் விலை கடந்த ஆண்டை விட மிகவும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
விலை குறைவு
இதுகுறித்து குன்னம் கிராமத்தை சேர்ந்த பருத்தி விவசாயி ரவி சுந்தரம் கூறுகையில், பருத்தி பயிர் செய்வதற்கு நிலத்தடி நீரை மின், டீசல் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை பாய்ச்சியும், உரிய நேரங்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தும் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் அறுவடையின் போது பருத்திக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.
ஆனால் பருத்தி கொள்முதல் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் குறைவாகவே உள்ளது. எருக்கூரில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான பருத்தி கொள்முதல் மையத்தின் மூலம் கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி பஞ்சு தரத்துக்கு ஏற்றவாறு ரூ.100 முதல் 120 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி பஞ்சு ரூ 60 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கூடுதல் விலை
கொள்முதல் விலை சந்தை நிலவரத்துக்கு தகுந்தார் போல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக அங்கு வரும் வியாபாரிகளும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சென்ற வருடத்தை விட அதிக பரப்பளவில் விவசாயிகள் பருத்தி பயிர் சாகுபடி செய்தும் விலை குறைந்துள்ளதால் பருத்தி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். எனவே அரசு பருத்தி விவசாயிகளின் நலன் கருதி கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் பருத்திக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.