ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. மேலும் ஏலத்திற்கு காய்ந்த பருத்தியை விவசாயிகள் கொண்டு வர வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-06-21 19:15 GMT

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. மேலும் ஏலத்திற்கு காய்ந்த பருத்தியை விவசாயிகள் கொண்டு வர வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.

பருத்தி கொள்முதல்

திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கோடை காலத்தில் பருத்தி சாகுபடி மேற்கொள்வார்கள். கடந்த ஆண்டு பருத்தியில் அதிக அளவில் லாபம் கிடைத்ததால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தி காய்த்து தற்போது அறுவடைக்கு தயாராகிவட்டது.

இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பருத்தி பஞ்சு பறிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்திக்கான ஏலமானது கடந்த 7-ந் தேதி தொடங்கப்பட்டு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது.

வியாபாரிகள்

இந்த ஏலத்தில் ஆந்திரா, கேரளா, கோவை, கும்பகோணம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு பருத்தி கிலோ ரூ.120-க்கு ஏலம் போன நிலையில் இந்த ஆண்டு நடந்த முதல் ஏலத்தில் ரூ.63-க்கு விலை போனது.

கடந்த ஆண்டு கூடுதல் விலை கிடைத்ததால் இந்த ஆண்டு விவசாயிகள் கூடுதல் பரப்பில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தியின் விலையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்து விட்டது.

ரூ.4.5 கோடிக்கு ஏலம்

பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் இருந்து பருத்தியை பாதுகாத்து விற்பனைக்கு கொண்டுவந்தால் போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், மூங்கில்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனா்.

திருவாரூரில் 3 முறை பருத்தி ஏலம் நடந்துள்ளது. முதல் ஏலத்தின் போது சுமார் ரூ.54 லட்சம் மதிப்பிலும், 2-வது ஏலத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 514 மதிப்பிலும், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 3 லட்சத்திற்கு ஏலம் போனது.

அதிகபட்ச விலை

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அதிபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 355-க்கும் ஏலம் போனது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.4.05 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது.

பருத்தியை விவசாயிகள் ஈரப்பதமாக கொண்டு வருவதால் குறைந்த விலைக்கே வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர். அதே நிலையில் பருத்தியை நன்கு காயவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்