மாநகராட்சி ஊழியர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்

வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்ற கமிஷனர் ரத்தினசாமி அறிவுரை வழங்கினார்.

Update: 2023-02-03 16:53 GMT

பொறுப்பேற்பு

வேலூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அவர் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், இனிப்புகள், பழங்கள் வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது அவர் ஊழியர்களிடம் கூறியதாவது:-

நேர்மையுடன்...

நாம் மக்களுடன் நேரடி தொடர்பில் பணியாற்றி வருகிறோம். அனைவரும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். புகார்கள் ஏதும் வரக்கூடாது. புகார்கள் வராமல் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும். மக்களை நாம் சந்திக்கும்போது பொறுமையுடன் மக்களிடம் பேச வேண்டும். சிறப்புடன் பணியாற்றுங்கள்.

தங்களது தனிப்பட்ட குறைகள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருந்தால் நேரடியாக என்னை சந்தித்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர் மாநகராட்சி மேயர் சுஜாதாவை சந்தித்து பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கமிஷனர் ரத்தினசாமியின் சொந்த மாவட்டம் ஈரோடு. இவர் மயிலாடுதுறை உதவி கலெக்டராகவும், நாகப்பட்டினம் கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்