பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகையை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-11 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகையை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பு ஒத்திகை

கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்தும், ஆக்சிஜன் இருப்பு குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இருப்பிட மருத்துவ அலுவலர் சரவண பிரகாஷ், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

112 பேருக்கு கொரோனா தொற்று

அரசு உத்தரவுப்படி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது. மருத்துவ அலுவலர்களும் தயாரான நிலையில் இருக்கிறார்கள். போதுமான வசதிகள் இங்கே இருக்கிறது. அதை ஆய்வு செய்து விட்டு கொரோனா தடுப்பு குறித்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இங்கு 3 நோயாளிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வகையான மருத்துவ உபகரணங்களும், தேவையான வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. கோவை மாவட்டத்தில் இதுவரை 112 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தினமும் 10 முதல் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சிகிச்சை

கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளின் நிலை மற்றும் இணை நோய்களை ஆய்வு செய்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கைகளை நன்றாக கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் தற்போது உள்ள நடைமுறையின் படி தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்