தமிழ்நாட்டில் 500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..!!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-15 16:57 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு ஆஸ்பத்திரி மற்றும் பொது இடங்களுக்கு வருபவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 502 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 254 பேர், பெண்கள் 248 பேர் அடங்குவர். இதேபோல, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, மலேசியாவில் இருந்து வந்தவர்களில் தலா 2 பேருக்கும், தாய்லாந்து, வங்காளதேசம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னையில் அதிகபட்சமாக 136 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி 52 பேரும், கோவை 42 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 28 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 329 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 48 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு இல்லை. திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்