தமிழகத்தில் கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.

Update: 2022-08-12 03:34 GMT

சென்னை,

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்தி கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற பெயரிலான தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வருகின்றனர்.

கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை 2 டோஸ்கள் செலுத்தி இருந்தாலும், செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள், இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுறுத்தலுக்கான கொரோனா பணிக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிந்துரையில் இருந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்