குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி சாம்பியன்

கோத்தகிரியில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் இறுதி போட்டியில் குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Update: 2022-08-21 14:35 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் இறுதி போட்டியில் குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

இறுதி போட்டி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடியது. முதலில் நடந்த லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி, ஊட்டி கென்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தநிலையில் நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. தலா 30 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஊட்டி கென்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 28.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியை சேர்ந்த மணி 43 ரன்கள் எடுத்தார். பிரின்ஸ் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

குன்னூர் அணி சாம்பியன்

குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி பந்து வீச்சாளர் ஜனார்த் 4 விக்கெட்டுகள், தினேஷ் குமார், ரகுராமன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 180 பந்துகளில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது. 24.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி வீரர்கள் யதுஷ் போஸ் 57 ரன்கள், அயன் மாத்யூஸ் 48 ரன்கள் எடுத்தனர்.

மேலும் தினேஷ் குமார் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இறுதி போட்டியில் வெற்றி பெற்ற குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி நீலகிரி மாவட்ட முதல் டிவிஷன் சாம்பியன் ஆனது. நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் விரைவில் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை, தனி நபர் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்