24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை
24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.;
திருப்பூர்
திருப்பூர் பெரியார்காலனி 8-வது வீதியை சேர்ந்தவர் சக்திவடிவேல். இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி திருப்பூர் மத்திய பஸ் நிலையம் முன் நிறுத்தி வைத்திருந்தார். இந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மத்திய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடியது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சந்தம்பாடியை சேர்ந்த அஜித்குமார் (வயது 36) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். வழக்கின் புலன் விசாரணையை மறுநாள் முடித்து ஜே.எம்.-2 கோர்ட்டில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முறையாக சாட்சிகளையும், சாட்சியங்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 24 நாட்களுக்குள் விசாரணை முடித்து அஜித்குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி மாஜிஸ்திரேட்டு பழனிகுமார் உத்தரவிட்டார்.
சிறப்பாக பணியாற்றிய தெற்கு போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்ரா, தலைமை காவலர்கள் பிரபு, சந்தோஷ்குமார், முதல்நிலை காவலர்கள் குருசாமி, மணிவண்ணன், கோர்டு முதல்நிலை காவலர் நாகராஜ் குட்டி ஆகியோருக்கு வெகுமதி வழங்கி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.