மினிலாரியில் பெர்னஸ் ஆயில் கடத்தல்; டிரைவர் கைது

தூத்துக்குடியில் மினிலாரியில் பெர்னஸ் ஆயில் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-15 18:45 GMT

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் பிளாஸ்டிக் பேரல்களில் பெர்னஸ் ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அனல் மின்நிலையம், கப்பல் ஆகியவற்றுக்கு எரிபொருளாக பயன்படுத்தக்கூடியது ஆகும். உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட அந்த பெர்னஸ் ஆயிலை தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மினிலாரியை ஓட்டி வந்த நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மினிலாரியையும், அதில் 50 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த சுமார் 8 ஆயிரத்து 500 லிட்டர் பெர்னஸ் ஆயிலையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய பாளையங்கோட்டையை சேர்ந்த சாலமன் அற்புதராஜ், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சம்சுதீன் ரபிக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்