சர்ச்சைக்குரிய வகையில் யூ-டியூப் சேனலுக்கு பேட்டி:முன்னாள் மாஜிஸ்திரேட்டுக்கு நிபந்தனை ஜாமீன்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சர்ச்சைக்குரிய வகையில் யூ-டியூப் சேனலுக்கு பேட்டி:முன்னாள் மாஜிஸ்திரேட்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-09-06 21:16 GMT


நாங்குநேரியில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, யூ-டியூப் சேனலுக்கு, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மாஜிஸ்திரேட்டு ஒருவர் பேட்டி அளித்திருந்தார். பேட்டியின்போது, சில குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாகவும், இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் நோக்கில் பேட்டி அளித்ததாக அப்பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கடந்த மாதம் 14-ந் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைக்கு ஒத்துழைப்பு தருவேன் என்ற அடிப்படையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ஒரு பொறுப்புமிக்க பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசியிருக்கக்கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு இந்த கோர்ட்டு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்குகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று சம்பந்தப்பட்ட கோர்ட்டில் அவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்