சர்ச்சைக்குரிய மருத்துவ ஆலோசனைகள்; எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவு
பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகார்கள் குறித்த விவரங்கள் ஷர்மிகாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் தெரிவித்தார்.
சென்னை,
சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து அவர் தெரிவித்த ஆலோசனைகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக பலர் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்க இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழ்நாடு பிரிவு துணை இயக்குனர் பார்த்திபன், கடந்த 9-ந்தேதி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக நேரில் ஆஜரானார். ஷர்மிகா வழங்கிய மருத்துவ குறிப்புகள் சித்த மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா, மருத்துவ குறிப்புகள் வழங்குவதற்கு முறைப்படி பதிவு செய்துள்ளாரா, அறிவியல் ஆதாரங்களோடு ஆலோசனைகள் வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணைக்குப் பின்னர் சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகார்கள் குறித்த விவரங்கள் ஷர்மிகாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஷர்மிகா கூறிய மருத்துவ ஆலோசனைகள் குறித்து விசாரிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், இது முதற்கட்ட விசாரணை தான் என்றும், இது குறித்து ஷர்மிகா பிப்ரவரி 10-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனை ஆய்வுசெய்து நிபுணர்கள் அளிக்கும் தகவல்படி ஷர்மிகா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் கூறினார்.