பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை ரத்து செய்யக்கோரி வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை ரத்து செய்யக்கோரி வண்டலூர் உயிரியல் பூங்கா தினக்கூலி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-01-06 14:53 IST

தினக்கூலி பணியாளர்கள்

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயற்கை எழிலோடு 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இந்த பூங்காவில் பெண்கள் உள்பட 219 பேர் தினக்கூலி பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பூங்காவில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் பெண்கள் உள்பட 219 பேரும் வண்டலூர் பூங்காவுக்கு வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.

பயோமெட்ரிக் வருகை பதிவேடு

அப்போது பூங்கா அதிகாரிகள், இன்றைய நாளில் இருந்து பயோமெட்ரிக் வருகை பதிவேடு பதிவு செய்யப்பட உள்ளதால், அனைவரும் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு தினக்கூலி பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பூங்கா நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூங்கா வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென தினக்கூலி பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பூங்காவில் அன்றாடம் நடைபெறும் துப்புரவு பணிகள், விலங்கு இருப்பிடங்கள் சுத்தம் செய்யும் பணிகள், விலங்குகளுக்கு உணவு வழங்கும் பணிகள், தண்ணீர் வினியோகம் செய்யும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டன.

பேச்சுவார்த்தை

தினக்கூலி பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்த பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்டபிரபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தினக்கூலி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது தினக்கூலி பணியாளர்கள் உடனடியாக பயோமெட்ரிக் வருகை பதிவேடு ரத்து செய்ய வேண்டும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இரவு நேரங்களில் 12 மணி நேரம் பணி என்பதை 8 மணி நேர பணியாக மாற்ற வேண்டும், தொழிலாளர்களின் கவுரவம், சுயமரியாதை காக்கும்படி அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை துணை இயக்குனரிடம் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மாலை 6½ மணிக்கு அவரகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்