ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-09 18:45 GMT

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதேபோல் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நாளுக்கு ரூ.721 வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்தார். பின்னர் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

உள்ளிருப்பு போராட்டம்

ஆனால் உறுதி அளித்தப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்திலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

நாங்கள் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு சம்பள உயர்வு கேட்டு போராடியபோது, ஒருநாளைக்கு ரூ.721 வழங்குவதாக கலெக்டர் அறிவித்தார். இதனை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உடனே வழங்க வேண்டும்

ஆனால் 2 மாதங்கள் ஆகியும் உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். நேரம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்