ஒப்பந்த நர்சுகள் போராட்டம் வாபஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அரசு உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால், ஒப்பந்த நர்சுகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2023-10-11 18:41 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று தகவல் கோரல் அடிப்படையில், சென்னையில் ஒப்பந்த நர்சுகள் நடத்திய போராட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), வானதி சீனிவாசன் (பா.ஜ.க.), ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.மணி (பா.ம.க.), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இறுதியாக, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது:-

2 மணி நேர பேச்சுவார்த்தை

நேற்று காலை டி.பி.எச்., டி.எம்.எஸ். வளாகத்தில் சுமார் 300 நர்சுகள் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் அனுமதி பெற்று போராட்டம் நடத்த 4 இடங்கள் உள்ளன. இவர்கள் போராட்டத்தால் வளாகத்தில் பணியாற்றிய மற்றவர்களின் பணி பாதிக்கப்பட்டது.

இதனால், அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு நர்சுகள் அழைத்து செல்லப்பட்டனர். நர்சு சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அழைத்து சுகாதாரத்துறையின் செயலாளர் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டம் வாபஸ்

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு (அதாவது 10-ந் தேதி) தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து நர்சுகள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். அதாவது, காலையில் தொடங்கிய போராட்டம் மாலையில் வாபஸ் பெறப்பட்டது.

2-7-2003 அன்று அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒரு கருப்பு நாள். எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் மூலம் போராட்டம் நடத்திய 1¾ லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 12 ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் என்றால் இடமாற்றம்

புதிதாக 12 ஆயிரம் ஊழியர்கள் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். அந்த நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியில் போராட்டம் என்றால், இடமாற்றம் செய்துவிடுவார்கள். தற்போது, 47 ஆயிரத்து 938 நர்சுகள் இருக்கிறார்கள். 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் 12 ஆயிரத்து 797 ஒப்பந்த நர்சுகள் நியமிக்கப்பட்டனர்.

சொந்த மாவட்டங்களில் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் ஒப்பந்த நர்சுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 499 நிரந்தர நர்சு காலி பணியிடத்துக்கும் இந்த ஒப்பந்த நர்சுகளில் இருந்தே விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு ஆஸ்பத்திரியிலும் 300 நர்சுகள் இதேபோல் நிரப்பப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்