கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை ரூ.49¼ கோடியில் மறுசீரமைக்க ஒப்பந்தம்
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரூ.49¼ கோடி செலவில் உலகத்தரத்தில் பல்வேறு வசதிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்குகிறது.
சென்னை,
தென்னக ரெயில்வே சார்பில் தமிழகத்தில் 5 ரெயில் நிலையங்களும், புதுச்சேரியில் ஒரு ரெயில் நிலையமும், கேரளாவில் 3 ரெயில் நிலையங்களும் சீரமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய5 ரெயில் நிலையங்களில் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த ரெயில்நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். இதில், எழும்பூர் ரெயில்நிலையத்தில் ரூ.735 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
தற்போது கன்னியாகுமரி ரெயில்நிலையத்தில் ரூ.49.36 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
உலகத்தரத்தில் வசதிகள்
உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் விமான நிலையம் போன்று தனித்தனி வருகை மற்றும் புறப்பாடு நடைபாதைகள், பிரகாசமான வெளிச்சம் மற்றும் 'எஸ்கலேட்டர்கள்', 'லிப்ட்' மற்றும் ஸ்கை வாக்குகள் மறுசீரமைப்பு பணிகளின் போது மேற்கொள்ளப்படுகிறது.
ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள், மேம்பட்ட உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. ரெயில்நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகள் வாகனங்களில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் என பிரத்யேக பகுதிகள், பாதசாரிகள் தடையின்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
நவீன வசதிகளுடன் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு டாக்சிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் போன்ற பல்வேறு போக்குவரத்து பார்க்கிங் வசதிகள் செய்யப்படுகிறது. பயணிகள் வாகனங்கள் இடையூறு இன்றி செல்ல தனி நடைபாதை உருவாக்கப்படுகின்றது. இந்த பணி விரைவில் தொடங்கும்.
சென்னை சென்டிரல்-தாம்பரம்
அடுத்தகட்டமாக தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்டிரல், தாம்பரம், ஆவடி, கோவை, நெல்லை, கும்பகோணம், திருவனந்தபுரம், வர்கலா, கோழிக்கோடு, மங்களூரு செங்கனூர், திருச்சூர் ஆகிய ரெயில்நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவைதவிர, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 38 நிலையங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், ரெயில்வே வாரியத்தின் இறுதி ஒப்புதலுக்கு பின்பு சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.