ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்

கூடலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் முறையாக வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2023-10-10 00:30 GMT


நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார்.

புதிய நீதி கட்சி அமைப்பு சார்பில் துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்பட 80 பேர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள குறைந்தபட்ச தினசரி கூலியான ரூ.653-க்கு பதிலாக, எங்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் ரூ.315 மட்டுமே கிடைக்கிறது. மேலும் எங்களுக்கு முக கவசம், காலணி, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் சரி வர வழங்குவது கிடையாது. வார விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. தூய்மை பணியாளர் இறப்புக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் எந்தவித உதவித்தொகையும் வழங்குவது கிடையாது. நகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து புகார் அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை எங்களுக்கு முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


சேரம்பாடியில் வசிக்கும் பழங்குடியின கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், நீலகிரி மாவட்டம் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட காவயல், மாலைப்பொட்டு மற்றும் வெள்ளாரங்குன்னு பகுதியில் காட்டுநாயக்கன் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

இந்தநிலையில், எங்களது வீடுகள் சேதமடைந்து விட்டதால், புதிய வீடு கட்டி தர வேண்டும் மற்றும் வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும் என்று உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்