புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கை; திண்டுக்கல் சீனிவாசன் கோரிக்கை

புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தினார்.

Update: 2023-04-13 21:44 GMT

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் வனத்தின் பரப்பு அதிகரிக்கப்பட்டது. அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உங்கள் ஆட்சியில் எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன, காடுகளின் பரப்பு எவ்வளவு சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பதை விளக்க வேண்டும். வனத்துறையில் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருக்கிறது.

வேட்டை தடுப்பு காவலர்களின் எண்ணிக்கை என்பது 40-க்கு 10 ஆக குறைந்து இருக்கிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி கொடுத்தோம். நீங்கள் அதை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

வேட்டை தடுப்பு காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்போதுதான் மனிதர்கள்-மிருகங்கள் மோதல் தடுக்கப்படும். நாங்கள் நிறைய காலிப்பணியிடங்களை நிரப்பினோம். எனவே அதை கருத்தில் கொண்டு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலிகளின் எண்ணிக்கை

புலிகளின் எண்ணிக்கை என்பது தற்போது குறைந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 40 சதவீதம் உயர்ந்த நிலையில் தற்போது புலிகளின் எண்ணிக்கை குறைவுக்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டும். புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி உள்பட சில பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தேயிலை தொழிலை லாபகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பரப்பலாறு அணை தூர்வாரப்படாமல் இருக்கிறது. அதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரைமுருகன்:- திண்டுக்கல் சீனிவாசன் சொல்லி விட்டார். செய்து விடலாம். பரப்பலாறு அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்