நுகர்வோர் கோர்ட்டுகளில் 3 மாதங்களில் தீர்வு கிடைக்கும்

நுகர்வோர் கோர்ட்டுகளில் 3 மாதங்களில் தீர்வு கிடைக்கும் என்று நீதிபதி மீனாட்சிசுந்தரம் பேசினார்.

Update: 2023-03-15 18:26 GMT

நுகர்வோர் பாதுகாப்பு தின விழா

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஒரு பொருளை பயன்படுத்துபவர்களும் சேவையை பெறுபவர்களும் நுகர்வோர்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு அதிகப்படியான உரிமை உள்ளது.

நுகர்வோர்களாகிய நீங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த பொருளை வாங்கினாலும் அதற்கு ரசீது பெற வேண்டும். அப்படிவாங்கினால் மட்டுமே அந்த பொருளில் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை தகுந்த ஆதாரத்துடன் உங்களால் அணுக முடியும். வழக்கு தொடரப்பட்ட 3 மாதத்துக்குள்ளேயே விசாரிக்கப்பட்டு தீர்வு பெறலாம்.

நீங்கள் வாங்கும் பொருள்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். புகார் ஏதும் இருந்தால் அதை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யலாம்.

தீர்வு கிடைக்கும்

பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு காப்பீடு செய்து இருப்பார்கள். அதில் விபத்து ஏற்படும் போது அதற்கு உரிய இழப்பீடு கிடைக்காவிட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். மருந்து, மாத்திரை காலாவதியாகி இருந்தாலும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருந்தாலும் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். அரசு துறைகளில் எந்த சேவை குறைபாடு இருந்தாலும் நுகர்வோர்கள் உங்களது உரிமைகளை பெறுவதற்கு நீதிமன்றத்தை அணுகினால் தீர்வு கிடைக்கும். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழிப்புணர்வு கண்காட்சி

விழாவில் உணவு பொருள் பாதுகாப்பு துறை, தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, கூட்டுறவுத்துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது. விழாவில் மாணவ -மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்