கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனை கூட்டம்
சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன், உத்தமபாளையம் திருகாளத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை மற்றும் கம்பம் காசி விஸ்வநாதர், கம்பராய பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் தமிழக அரசு உத்தரவின்பேரில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. இதற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் திருப்பணி செய்ய சின்னமனூர் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கோவில் புனரமைக்கப்பட்டு கோபுரங்களுக்கு வர்ணங்கள் பூசப்படும் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு (ஜனவரி) மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி, சின்னமனூர் நகராட்சி தலைவர் ராமு அய்யம்மாள் மற்றும் நகராட்சி துணைத்தலைவர் முத்துக்குமார், காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விரியன்சாமி, தொழிலதிபர் துர்கா வஜ்ரவேல், லட்சுமி லஞ்ச் ஹோம் உரிமையாளர் பெருமாள், கருணா ஓட்டல் உரிமையாளர் பொன் ஆனந்தன், பாரதீய ஜனதா கட்சி நகர தலைவர் லோகேந்திர ராஜன், தி.மு.க. பிரமுகர் முத்துக்குமரன், டாக்டர் ரவிசங்கர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கோவில் வளாகத்தை ஆய்வு செய்தனர்.