விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-28 17:44 GMT

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷா, ஊரகநலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதாரா பணிகள் துணை இயக்குனர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

50 வகையான போட்டிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்த 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

பொதுபிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து போட்டியும், பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

பதிவு செய்ய வேண்டும்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயரினை TN Sports ஆடுகளம் என்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விபரங்களை பதிவு செய்திட வேண்டும்.

போட்டிகள் தொடர்பான விபரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703463 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரிவு வீரர், வீராங்கனைகளும் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்