கட்டிட தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
அம்பை அருகே கட்டிட தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அம்பை:
அம்ைப அருகே பிரம்மதேசம் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகநயினார். இவருடைய மகன் முப்பிடாதி (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று முப்பிடாதி, அம்பை அருகே வாகைக்குளத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து தனது வீட்டுக்கு புறப்பட்டார். வாகைகுளம் பகுதியில் உள்ள தெரு வழியாக சென்றபோது, அங்கு வந்த சிலர் முப்பிடாதியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முப்பிடாதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, முப்பிடாதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அம்பை அருகே கட்டிட தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.