சேலம் மாநகராட்சியில் ரூ.8 கோடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நலவாழ்வு மைய கட்டுமான பணிகள் மேயர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
சேலம் மாநகராட்சியில் ரூ.8 கோடியில் நடந்து வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நலவாழ்வு மைய கட்டுமான பணிகளை மேயர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம், டிச.15-
சேலம் மாநகராட்சியில் ரூ.8 கோடியில் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நலவாழ்வு மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி சூரமங்கலம் மண்டலம் 18-வார்டு ஸ்டேட் பேங்க் காலனி, 28-வது வார்டு வண்டி பேட்டை, அம்மாப்பேட்டை மண்டலம் 37-வது வார்டு குமரகிரிபேட்டை, 41-வது வார்டு பாவடி சேர்மன் ராமலிங்கம் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறும் போது, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நலவாழ்வு மையங்களில் தலா ஒரு டாக்டர், மருத்துவ பணியாளர், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கட்டுமான பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார். ஆய்வின்போது மண்டல குழுத்தலைவர் தனசேகர், மாநகர நல அலுவலர் யோகானந் உள்பட பலர் உடனிருந்தனர்.