கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அருகே ரூ.10.83 கோடியில் மதகுகள் அமைக்கும் பணிகள் நிறைவு
கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அருகே ரூ.10.83 கோடி செலவில் மதகுகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன.;
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ரூ.380 கோடி செலவில் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து 1,486 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் அருகே கரடிபுத்தூர் கிராம ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கால்வாய் வழியாக கடலுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். ரூ.380 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளதால் கரடிபுத்தூர் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடலுக்கு செல்லாமல் விளை நிலங்களில் தேங்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க கரை சேதமடைய வாய்ப்பு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நீர்த்தேக்கம் அருகே ரூ.10.83 கோடி செலவில் தடுப்புச்சுவர் மற்றும் உபரி நீர் கடலுக்குத் தங்கு தடையின்றி பாய்ந்து செல்ல 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய், மதகுகள் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டன. இதற்கிடையில் கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.
அதன் பின்னர், பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்புக்கு தயாராக உள்ளது.