ரூ.69 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி
ஏலகிரி மலையில் ரூ.69 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் 14 கிராமங்களில் உண்டு உறைவிடப்பள்ளிகள் உள்ளன. மேலும் அத்தனாவூர், நிலாவூர், மங்கலம், உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
இந்த அனைத்து பள்ளிகளும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆகும். இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கலம் கிராமத்தில் இருக்கும் பள்ளியையும், நிலாவூர் கிராமத்தில் உள்ள பள்ளியையும் சீரமைக்கப்பட்டது.
தற்போது அத்தனாவூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேதம் அடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.
தொடர்ந்து ரூ.69 லட்சத்து 15 ஆயிரத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது துணைத்தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.