அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.3 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.3 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அறுவை சிகிச்சை பிரிவு
கோத்தகிரி பஸ் நிலையம் அருகில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு வெளிநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் உள்பட பல்வேறு வார்டுகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இல்லை. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல், மேல் சிகிச்சைக்காக ஊட்டி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். மலைப்பாதையில் செல்ல நீண்ட நேரம் ஆவதால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
இதையடுத்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் 7 படுக்கைகளுடன் கூடிய விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவை 8,200 சதுர அடியில் கட்டுவதற்காக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கட்டுமான பணிகள் மும்முரம்
இந்த பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து, குறித்த காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டும் பணிகள் நிறைவடைந்தது.
தொடர்ந்து கடந்த வாரம் முதல் தளத்திற்கு கான்கிரீட் கூரை அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் கட்டிடத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறும்போது, அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவு பெற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.