2 கிலோமீட்டருக்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
கொள்ளிடம் அருகே புதுமண்ணி ஆற்றில் 2 கி.மீ தூரத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே புதுமண்ணி ஆற்றில் 2 கி.மீ தூரத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுமண்ணியாறு பாசன வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வருவது புதுமண்ணியாறு பாசன வாய்க்கால் ஆகும்.இது தஞ்சை மாவட்டத்தில் மணஞ்சேரி என்ற இடத்தில் காவிரியிலிருந்து பிரிந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியே வந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசன வசதி அளித்துவிட்டு இறுதியில் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு வருகிறது.
இங்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனம் அளித்து இறுதியில் பழையாறு துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்க கடலில் கலக்கிறது. பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் இந்த வாய்க்கால் சிறந்த வடிகால் வசதியையும் செய்து வருகிறது.
கான்கிரீட் தடுப்புச்சுவர்
இந்த பாசன வாய்க்கால் மாதானம் கிராமத்தில் தண்ணீர் எளிதில் சென்று வடிய வைக்கும் வகையிலும், கரை பகுதியை பலப்படுத்தும் வகையிலும் தண்ணீர் சேதத்தை குறைக்கும் வகையிலும் ஆற்றின் இரு புறங்களிலும் கரையை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
விவசாயிகள் மேலும் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு பழையபாளையம் கிட்டியனை உப்பனாறு பகுதி வரை தொடர்ச்சியாக புதுமணியாற்றில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீண்டும் புதுமண்ணியாறு பாசன வாய்க்காலின் பக்கவாட்டில் இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த புதுமண்ணியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்கோதண்டராமன் கூறுகையில், புது மண்ணி ஆறு கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாகவும் வடிகால் வாய்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலை பலப்படுத்தும் வகையில் கடந்த வருடம் மாதானம் கிராமத்தில் வாய்க்காலில் இருபுறங்களிலும் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. மேலும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கையினை ஏற்று தற்போது தொடர்ந்து பழையபாளையம் கிராமம் வரை கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கு ஏற்படும்போது உடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.மேலும் தண்ணீர் எளிதில் சென்று வடிய வாய்ப்புள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.