வடகரையில் புதிய அங்காடி கட்டிடம் கட்ட நடவடிக்கை

வடகரையில் புதிய அங்காடி கட்டிடம் கட்ட நடவடிக்கை

Update: 2023-08-31 18:45 GMT

வடகரையில் புதிய அங்காடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றியக்குழு கூட்டம்

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு

தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

இளஞ்செழியன் (தி.மு.க.): ஏற்கனவே இடிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட பணி தொடங்கி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மழை காலம் தொடங்குவதற்கு முன்பு வீடுகள் கட்டும் பணியை விரைந்து தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மணிவண்ணன் (தி.மு.க.): 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித்தர ஒப்பந்தம் எடுத்துக்கொண்டு வேலையை செய்து முடிக்காமல் மக்களை அலைக்கழிக்கும் ஒப்பந்தத்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும். காலை உணவு திட்டத்தில் தேர்வு செய்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு பின்னர் தகுதி இல்லை என யாரையும் வெளியேற்றாமல் அனைவருக்கும் திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டில் உள்ளதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

புதிய அங்காடி கட்டிடம்

இந்திரா அருள்மணி (அ.தி.மு.க): கிடாமங்கலம் மெயின் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் சாலையில் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அதனை சரி செய்ய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுல்தான் ஆரிப் (தி.மு.க.): வடகரையில் புதிய அங்காடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர்: திட்டச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மூலம் திறக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் உள்பட உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்