பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரிக்கு பரிசீலனை
கொடைக்கானலில் பேரிஜம் ஏரியில் பரிசல் விடுவதற்கு பரிசீலனை செய்யப்படுவதாக மாவட்ட வனஅலுவலர் கூறினர்.
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கானலில் வனப்பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிட்ட பிறகு, அவர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளிப்பதற்காக பல்வேறு இடங்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் நுழைவு கட்டணம் தவிர வேறு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. அங்கு தினமும் 100 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வனப்பகுதியில் பேரிஜம் ஏரி பகுதியை பார்க்க விரும்பாதவர்கள், நபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி மற்ற சுற்றுலா இடங்களை பார்க்கலாம். வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் தனியாக வசூல் செய்யப்படும். வனப்பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுக்கப்படும். பேரிஜம் ஏரியை தூய்மைப்படுத்தவும், அங்கு பரிசல் சவாரி இயக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அதிகரிக்கப்படும். வனப்பகுதியில் ஒரு வழிப்பாதை முறை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.