அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: கோவையில் அதிவிரைவுப்படை போலீசார் அணிவகுப்பு
கோவையில் அதிவிரைவுப்படை போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.;
கோவை,
கோவையில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக வெள்ளலூரில் உள்ள அதிவிரைவுப்படை போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக 4 கம்பெனி சிறப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
ஆத்துப்பாலம் மற்றும் காந்திபுரத்தில் அதிவிரைவுப்படை போலீசார் துப்பாக்கி, கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் உள்ளிட்டவற்றுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
குண்டர் சட்டத்தில் கைது
கோவை மாநகரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஒவ்வொரு சம்பவத்திற்கும் தலா 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இவவாறு அவர் கூறினார்..
மசூதிகளுக்கு பாதுகாப்பு
கோவையில் பா.ஜனதா அலுவலகத்துக்கு நேற்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அனைத்து மசூதிகளிலும் மதியம் தொழுகை நடந்தது. இதையடுத்து முக்கிய மசூதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஈரோடு
ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் டீசல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடு என நினைத்து பக்கத்து வீட்டில் கல்வீசி ஜன்னல், கார் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் ஒரு வீட்டில்...
இந்த நிலையில் கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக- கேரள கேந்திர பொறுப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.