இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி புத்துணர்ச்சி அளிக்கிறது - விஜய் வசந்த் எம்.பி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறப்போகும் மிகப்பெரிய வெற்றிக்கு இந்த வெற்றி முதல் படி என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி,
இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தியது. இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இன்று இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற மாபெரும் வெற்றி நமது கட்சிக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறப்போகும் மிகப்பெரிய வெற்றிக்கு இந்த வெற்றி முதல் படி. இந்த வெற்றிக்காக உழைத்த இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த வெற்றியின் உழைப்புக்கு உத்வேகம் அளித்த அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருமதி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.