காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்; 180 பேர் கைது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காட்பாடி, குடியாத்தத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய 180 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காட்பாடி, குடியாத்தத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய 180 பேரை போலீசார் கைது செய்தனர்.
எம்.பி. பதவி பறிப்பு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், அறப்போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காட்பாடி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.
அங்கு நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயில் முன்பாக அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
என்ஜின் மீது ஏறிய நிர்வாகி
அப்போது திடீரென ஒரு நிர்வாகி ரெயில என்ஜின் மீது ஏறி நின்றும் மேலும் 2 பேர் ரெயில் என்ஜின் முன்பு நின்றும் கோஷங்களை எழுப்பினர். இதனை பார்த்து பதறிய போலீசார் ரெயில் என்ஜினில் ஏறிய நபரை அப்புறப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் எஸ்.சி.எஸ்.டி. மாநில செயலாளர் சித்தரஞ்சன், ஓ.பி.சி.மாநில பொதுச்செயலாளர் கே.எஸ். ரவி, மண்டல தலைவர்கள் மற்றும் 13 பெண்கள் உள்பட உள்பட 70 பேரை காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
குடியாத்தம்
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் உள்பட கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்வதாக கூறினர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட நிர்வாகிகளை மட்டும் ரெயில் மறியலுக்காக அனுமதித்த போலீசார் மற்றவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் ரெயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதில் பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியினரை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட நகர நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்தது பேசினர்.