ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கோவை,
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த காங்கிரஸ் கட்சியினர், ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியனரை போலீசார் கைது செய்து காவல்துறை வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
சென்னையை தொடர்ந்து கோவையிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால் அப்பகுதி பரபரப்புடன் கானப்பட்டது.