காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

சுதந்திர தின பவள விழாவையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரையை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தாா்.

Update: 2022-08-13 17:48 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் 75-ம் ஆண்டு சுதந்திர தின பவள விழாவையொட்டி பாதயாத்திரை விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாநில துணைத்தலைவர்கள் செந்தமிழ் அரசு, குலாம்மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு மகாத்மாகாந்தி, ராஜீவ்காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாதயாத்திரையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, விழுப்புரம் சிக்னல் அருகில் உள்ள 75-ம் ஆண்டு பவள விழா நினைவுக்கொடி கம்பத்தில் கொடியேற்றி வைத்து அங்குள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதில் அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில செயலாளர் தயானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் பாபுசத்தியமூர்த்தி, நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், நகரமன்ற கவுன்சிலர்கள் இம்ரான்கான், சுரேஷ்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வாசிம்ராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் விஜயரங்கன், ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தியாகம் மறைப்பு

அதனை தொடர்ந்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய கொடிக்கு பின்னால் காங்கிரசாரின் தியாகம் இருக்கிறது. தேசிய கொடியை இப்போது ஏற்றும் பா.ஜ.க., தேசிய கொடிக்கு பின்னால் இருக்கும் தியாகத்தை மட்டும் மறைக்க முயற்சிக்கிறது.

75 ஆண்டுகளாக சுதந்திர தினத்தை காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. இப்போதாவது பா.ஜ.க., சுதந்திர தினத்தை கொண்டாடுகிறதே என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், வரவேற்கிறோம். அதே நேரத்தில் இவ்வளவு ஆண்டுகாலம் ஏன் சுதந்திர தின விழாவை கொண்டாடவில்லை என்று நாட்டு மக்களுக்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

நீட் தேர்வு

கவர்னரை சந்தித்தபின் வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக மக்கள் மீது பிரியமாக இருப்பதாகவும், தமிழர்களுக்காக எதையும் செய்யத்தயாராக இருப்பதாகவும், அரசியல் பேசினோம், ஆனால், என்ன பேசினோம் என தெரிவிக்க மாட்டேன் என்று கருத்து தெரிவித்துள்ளார். கவர்னருக்கு தமிழக மக்களின் நலனில் அக்கறை இருந்தால் வரவேற்போம்.

நீட் தேர்வு இந்த மாநிலத்துக்கு ஒத்துவரவில்லை. மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 90 சதவீதம் மாநில பாடத்திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்துவிட்டு நீட் தேர்வு எழுவது கடினம் என்பதால்தான் தமிழகத்தில் நீட் தேர்வை காங்கிரஸ் எதிர்க்கிறது.

தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமாக மாற்ற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். அதற்குப்பின் வேண்டுமானால் நீட் தேர்வை அமல்படுத்தலாம்.

பிரதமர் வேட்பாளர்

நீட் தேர்வை காங்கிரஸ் மட்டுமன்றி ஜெயலலிதா கூட எதிர்த்தார். இது அரசியல் காரணத்துக்காக அல்ல. மாணவர்களின் எதிர்காலம், தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கிறது.

நீட் தேர்வு ரத்து மசோதாவில் கையெழுத்திடும்படி கவர்னர் சந்திப்பின்போது ரஜினி அழுத்தம் கொடுத்திருந்தால் தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கம் காங்கிரசுக்கு கிடையாது. அனைவருக்கும் சரியாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் கோஷ்டி அரசியல் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்