பார்க்கிங் வசதி இல்லாத மண்டபங்களால் நெரிசலில் சிக்கும் மக்கள் கதிகலங்கி நிற்கும் வாகன ஓட்டிகள்

பார்க்கிங் வசதி இல்லாத மண்டபங்களால் நெரிசலில் சிக்கும் மக்கள் கதிகலங்கி நிற்கின்றனா்.

Update: 2023-02-15 18:45 GMT

இன்றைய நவீன காலத்தில் திருமணத்தை பொறுத்தவரை நிறைய தேவையற்ற செலவுகள் இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு நம்முடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி நாம் தான் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்றால் திருமண செலவில் பெரும் பங்கு வகிப்பது மண்டபம் மற்றும் சாப்பாடு ஆகிய இரண்டும் புரட்டி போட்டு விடுகிறது.

முட்டி மோத வைக்கும் வாடகை

வசதிக்கு தகுந்த மாதிரி திருமண மண்டபங்களை தேர்வு செய்தால் அந்த செலவை குறைக்க முடியும். அதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் சிறிய ஹால்களில் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்றாலும், அதன் வாடகையும் முகூர்த்த காலங்களில் முட்டி மோத வைத்து விடுகிறது. மனதுக்கு பிடித்த மண்டபங்களை பிடிக்க திண்டாட்டமாகி விடுகிறது.

திருமண மண்டபங்களுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிலும் முகூர்த்த நாட்களில் சில இடங்களில் இருமடங்கு வாடகை உயர்த்தப்படுகிறது. ஆனால் ஏழை, எளிய மக்கள் கதிகலங்கி நிற்கும் அளவுக்கு வாடகை வசூலிக்கப்படுகிறதே தவிர, பெரும்பாலான மண்டபங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து கொடுப்பதில்லை.

சாலையை அலங்கரிக்கும் வாகனங்கள்

உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் சிறிதும், பெரிதுமாக 200-க்கும் மேற்பட்ட மண்டபங்கள் உள்ளன. அதிலும் கடலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 20-க்கும் அதிகமான திருமண மண்டபங்கள் அமைந்துள்ளது. இதில் அதிக கட்டணம் வசூலிக்கும் சில மண்டபங்களில் பார்க்கிங் வசதி என்பது இல்லை.

இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் வீதிக்கு வீதி திருமண மண்டபங்கள் தோன்றியுள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலான மண்டபங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி கிடையாது. இதனால் மண்டபங்களின் முன்புள்ள சாலையை தான் வாகனங்கள் அனைத்தும் அலங்கரிக்கிறது.

பார்க்கிங் வசதி

அதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் சுருங்கி போய் காணப்படும் சாலைகள், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்தே ஸ்தம்பித்து விடுகிறது. பல சமயங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த நெரிசலில் சிக்கிக் கொள்கிறது.

அதனால் போக்குவரத்து நெரிசல்களுக்கெல்லாம் மூலக்காரணமாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத மண்டபங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கடலூர் பரமேஷ்: கடந்த காலங்களில் நகர பகுதிகளில் எளிதாக உரிமம் பெற்று மண்டபங்களை கட்டி விட்டனர். ஆனால் அங்கு பார்க்கிங் வசதி ஏதும், அதன் உரிமையாளர்கள் ஏற்படுத்தவில்லை. அனைத்து மண்டபங்கள், ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் பார்க்கிங் வசதிகள் அவசியம் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் பார்க்கிங் வசதி இல்லாத ஒரே காரணத்துக்காக பல பெரிய நிறுவனங்கள், ஜவுளி கடைகள் சீல் வைக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. ஆனால் கடலூர் மாநகரில் மட்டும், அதை மண்டப உரிமையாளர்களும், அதிகாரிகளும் கண்டு கொள்வது இல்லை. அவர்கள் செய்யும் தவறுகளால் வாகன ஓட்டிகள் தான் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் அதிகாரிகள், மண்டபங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

கடலூர் புதுப்பாளையம் ஸ்ரீதா்: கடலூர் மாநகரில் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் சில மண்டபங்களில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. அதனால் சுபமுகூர்த்த நாட்களில் மண்டபங்களுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை மண்டபங்களின் முன்புள்ள சாலைகளின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதித்து, வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவசர பணியாக செல்பவர்கள் தவிக்கும் நிலை உள்ளது. அதனால் பார்க்கிங் வசதி இல்லாத மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண மண்டபங்கள் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதை போலீசார் தடுத்து, போக்குவரத்தை சீராக வைத்திருக்க வேண்டும்.

வீடுகளில் நடந்த நிகழ்ச்சிகள்

விருத்தாசலம் முக்தார் அலி: விருத்தாசலத்தில் வீதிக்கு வீதி திருமண மண்டபங்கள் பெருகிவிட்டன. கிராமங்களில் கோவில்களிலும், வீடுகளிலும் நடந்து வந்த சுப நிகழ்ச்சிகள் தற்போது நகரங்களில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறுவதால் கிராம மக்கள் திரண்டு வருகின்றனர். பஸ், வேனில் வருவதை விட தாங்கள் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களின் வருவதைத் தான் பொதுமக்கள் விரும்புகிறார்கள். அவ்வாறு வரும் மக்கள், தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு திருமண மண்டபங்களில் போதிய இடவசதிகள் இல்லை. இதனால் சாலையை பார்க்கிங்காக பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதியடைந்து வருகின்றனர். முகூர்த்த நாட்களில் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அப்பகுதி வழியாக ஏதேனும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வந்தால் திருமண மண்டபத்தை தாண்டி செல்வதற்குள் படாதபாடுபடுகிறார்கள். மண்டபங்களை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தில் அனுமதி கேட்கும் போது முதலில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா என்று பார்த்து அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் பார்க்கிங் வசதி ஏற்படுத்த தகுந்த அறிவுரைகள் வழங்கி பார்க்கிங் வசதி ஏற்படுத்திய பின்பு அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும்.

அவதிப்படும் மக்கள்

சிதம்பரம் திருமாறன்: சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலால் தினந்தோறும் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் சில திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. சரியான பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்களின் வெளியே சாலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளில் கூட சில திருமண மண்டபங்கள், பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே சரியான பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை பார்க்கிங் வசதியுடன் கூடிய திருமண மண்டபங்களாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்