மான் இறைச்சி பறிமுதல்

ராஜபாளையம் அருகே மானை வேட்டையாடிய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-11 19:56 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே மானை வேட்டையாடிய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மான் வேட்டை

ராஜபாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மேல ஆவாரம்பட்டி பகுதியில் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வனவர் இளவரசன் தலைமையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரது வீட்டில் வைத்து மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. வனத்துறையினர் ரோந்துக்கு வந்த தகவலை அறிந்த மாடசாமி உள்பட 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இறைச்சி பறிமுதல்

அப்போது அதே பகுதியை சேர்ந்த காளிராஜ் (வயது 21) என்பவர் மான்கறி வாங்க வந்துள்ளார். அவரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி, அரிவாள் மனை, உள்ளிட்ட ஆயுதங்களையும், எடை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த எந்திரத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

காளிராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தப்பி ஓடியவர்கள் வாழைகுளம் பீட் பகுதியில் இரவில் மான்களை தொடர்ந்து வேட்டையாடி, பகலில் மாமிசத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

6 பேருக்கு வலைவீச்சு

இதனைத்தொடர்ந்து காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறையினர் தப்பி ஓடிய 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் மான் வேட்டையில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வேட்டை நடப்பதாக சந்தேகப்படும் பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்