சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்
ஊட்டியில் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருக்கிறதா என்று நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர். மேலும் நீலகிரியில் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி,
ஊட்டியில் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருக்கிறதா என்று நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர். மேலும் நீலகிரியில் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பயன்பாடு
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பொருட்கள் உள்பட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், வெளிமாநில மற்றும் பிற மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகையால் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகமாக இருந்தது.
இதையடுத்து நீலகிரியில் ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தொடர் விடுமுறை என்பதால், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.
ரூ.15 ஆயிரம் அபராதம்
சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரி மகாராஜன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால், வாகன நிறுத்தும் இடங்களில் நகராட்சி அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஒரு தங்கும் விடுதிக்கு ரூ.10 ஆயிரம், சுற்றுலா பயணிகளுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. பந்தலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என தாசில்தார் நடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் லட்சுமி சங்கர், விஜயன் ஆகியோர் சோதனை நடத்தினர். 6 கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்து ஒரு கிலோ பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.