கார்களில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கார்களில் கடத்த முயன்ற குட்கா மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-19 18:45 GMT

சூளகிரி:

பெங்களூருவில் இருந்து கார்களில் கடத்த முயன்ற குட்கா மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

சூளகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளைகொத்தூர் பகுதியில் கார் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது. அந்த காரை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அதில் 370 கிலோ குட்கா மற்றும் 48 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தன.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது அவை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. மேலும் போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்கா மற்றும் மதுபாட்டில்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 பேர் கைது

ஓசூர் அருகே மாநில எல்லையான சிப்காட் பகுதியில், நேற்று அதிகாலை ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே துக்கியம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (34),குமார், (30), வாணியம்பாடி அருகே சின்ன களியம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபு (33), சூளகிரி அருகே கீரனப்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் (25) ஆகியோர் என்பதும் பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்கள் திருப்பத்தூருக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்