பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 1,400 மதுபாட்டில்கள் பறிமுதல்
பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 1,400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நத்தம் அருகே அரவங்குறிச்சி, பட்டிகுளம் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரவங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 1,400 மதுபாட்டில்கள் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் விற்ற பட்டிகுளத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 52) என்பவரை கைது செய்தனர்.