7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்த 7,400 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-05 16:35 GMT

நாகர்கோவில்:

கேரளாவுக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்த 7,400 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாகர்கோவில் வட்டவிளையில் உள்ள ஒரு தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிாிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் மூடை மூடையாக ரேஷன் அரிசி இருந்தது. மேலும் அங்கு புறப்பட தயாராக இருந்த ஒரு ஆட்டோவிலும் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. அந்த வகையில் ஆட்டோவில் 400 கிலோவும், குடோனில் 7000 கிலோவும் என மொத்தம் 7,400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

2 பேர் கைது

இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகளையும், ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த கோட்டாரை சேர்ந்த பெருமாள் மற்றும் அவருடைய மகன் சுஜித் (வயது 22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சுஜித் எம்.சி.ஏ. படித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே அரிசி கடத்த முயன்ற வழக்கு உள்ளது. குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்