2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு ஜீப்பில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஜீப் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
போடி மெட்டு வழியாக ஜீப்பில் கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் போடி முந்தல் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீப்பை ஓட்டி வந்த சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த வனத்துரை (வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கூடலூர் புதிய பஸ்நிலையம் பகுதியில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி வைக்கப்பட்டு இருந்தது. அதனை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.