தென்மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெற சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

தென்மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெற சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மதுரையில் கி.வீரமணி தலைமையில் நடந்த தி.க. மாநாட்டில் வலியுறுத்தி தலைவர்கள் பேசினர்.

Update: 2023-01-27 19:01 GMT

தென்மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெற சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மதுரையில் கி.வீரமணி தலைமையில் நடந்த தி.க. மாநாட்டில் வலியுறுத்தி தலைவர்கள் பேசினர்.

திறந்தவெளி மாநாடு 

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திறந்தவெளி மாநாடு பழங்காநத்தம் பகுதியில் நேற்று இரவு நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் முருகானந்தம் வரவேற்று பேசினார். தென் மாவட்ட பிரசாரக்குழு தலைவர் எடிசன் ராஜா முன்னிலை வகித்தார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் பலர் கலந்துெகாண்டனர்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

தென் மாவட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை வேண்டும் என்றே தடுத்துவிட்டனர். இதனால், தென் தமிழகத்தின் பொருளாதாரம், இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோய் உள்ளது.

சேது சமுத்திர திட்ட கால்வாயை, திராவிட கால்வாய் என அழைப்போம். தற்போது அந்த திட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. அ.தி.மு.க.வும் அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க.வும் ஆதரவு கொடுக்கும் நிலைக்கு வருவார்கள். இதனால், இதுவரை செலவழித்த பணம் வீணல்ல. மீண்டும் அந்த திட்டம் நம் கையில் வந்து சேரும்.

பிரசார இயக்கம்

சேது சமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக நாடு தழுவிய இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். அதன் முதற்கட்டமாக அண்ணா பிறந்த நாளில் ஈரோட்டில் இந்த பிரசார இயக்கத்தை தொடங்குகிறோம். 1½ மாதம் பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

ராமரை கூறி தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் வந்தால், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியும். 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அந்த தேர்தல் மூலம் பல பாடங்கள் புகட்டப்படலாம். அதனால், சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். 40 இடங்களில் வெற்றி கிடைத்தால், 400 இடங்களை பிடிக்கலாம்.

கட்சி, அரசியல் கடந்து சேது சமுத்திர திட்டம் வரவேண்டும் என்பதே எல்ேலாருடைய நோக்கம். பெரியார் மண்ணில் ராமர் கதை செல்லுபடியாகாது. பக்தி மட்டும் போதாது, புத்தியும் வேண்டும். திராவிட இயக்கத்தில் புத்தி உள்ளது. மக்கள் நினைத்தால் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியும். அதற்கான பணிகளை தமிழக முதல்- அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். கருணாநிதி கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்தை மு.க.ஸ்டாலின் முடித்து வைப்பார். திராவிட மாடல் ஆட்சி, சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்கி நிறைவு செய்யும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதாவது:-

சேது சமுத்திர திட்டம் 5, 6 ஆண்டுக்கு முன்னரே நிறைவேறி இருக்க வேண்டும். இந்த திட்டம் முடங்கியதால் மிகவும் வேதனை அடைந்தேன். மக்கள் ஒவ்வொருவரும் சேது சமுத்திர திட்டம் இப்படி ஆகி விட்டதே என்ற கவலையில் உள்ளார்கள். அதை நீக்குவதே எனது வேலை, சேது சமுத்திர திட்டத்தை தன் தலையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு தமிழருக்கும் கி.வீரமணி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தை சீக்கிரம் முடியுங்கள் என பலர் கடிதம் போட்டுள்ளனர்.

உள் துறை அமைச்சகம் கூட கடிதம் எழுதியுள்ளது. ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்கிறார்கள். அங்கு ஆய்வு நடந்ததில் கட்டுமானம் இருந்ததாக தகவல்கள் இல்லை. ராமர் கட்டிய பாலம் என்கிறீர்களே. என்றாவது பூஜை செய்தீர்களா? இந்த திட்டம் நிறைவேறினால் 70 சதவீத கப்பல்கள் இந்த வழியாக சென்றிருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

சேது சமுத்திர திட்டம் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். இந்த திட்டத்தில் மதம், அரசியலை புகுத்த கூடாது. ராமாயணம் நடந்ததா இல்லையா, ராமர் இருந்தாரா இல்லையா எனும் விவாதத்துக்குள் செல்லவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தால் தென் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருக்கும். சேது சமுத்திர திட்டத்தை நிறுத்த ராமர் பெயரை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும். சேது சமுத்திரத் திட்ட உண்மைத் தன்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடங்கி 70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், வழக்கு போட்டு பாதியில் நிறுத்திவிட்டார்கள். அந்தத் திட்டம் முடிவடைந்திருந்தால் தி.மு.க.விற்கு புகழ் கிடைத்திருக்கும். அதன் காரணமாகவே நிறுத்திவிட்டார்கள். இதனால் மனித உழைப்பு, பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாகியது. மதநம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையை கூறி நல்ல திட்டத்தை நிறுத்தி விட்டனர். அதனை மீண்டும் செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இந்த திட்டத்தின் நன்மை, தேவைகளை அனைவரும் அறிய வேண்டும். மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் யாராலும் நம்மை காப்பாற்ற முடியாது. அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்படும். ஆட்சி முறை, தலைநகரம் ஆகியவை கூட மாற வாய்ப்பிருக்கிறது. தென்மாவட்டங்கள் தொழில் வளம் பெருக சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தி.க. மாவட்ட செயலாளர் சுப. முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்