தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்துகிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பவானி
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 56). இவர் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திலேயே மா்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடந்தது.
பவானியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பவானி தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு நில அளவையர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் சங்கத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்டார பொருளாளர் விவேகானந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபி
இதேபோல் கோபி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக ஈரோடு மாவட்டத் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பினர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு நில அளவையர் சங்கம், தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்க அமைப்புகளின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் தலைவர் தவுசியப்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராக்கி முத்து, மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் சுப்பிரமணி, வட்டார வருவாய் கிராம உதவியாளர் சங்க தலைவர் பெரியசாமி, மாவட்ட அரசு ஊழியர் சங்க துணை தலைவர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அந்தியூர்
அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அந்தியூர் வட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு நில அளவை ஒன்றிய சங்கத்தைச் சேர்ந்த நடராஜன், கிராம உதவியாளர் சங்கத்தினர், வருவாய் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நம்பியூர்
நம்பியூரில் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை சார்பில் ஆர்ப்பாட்டம் கிராம நிர்வாக அலுவலர் சுமதி தலைமையில் நடந்தது. இதில் வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை துணை தலைவர் ராமலிங்கம், வட்டக்கிளை செயலாளர் கருப்புசாமி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நம்பியூர் வட்ட தலைவர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பெருமாள் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பேரூராட்சி ஊழியர் சங்க நிர்வாகி ரஹ்மத்துல்லாஹ் நன்றி கூறினார்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு மொடக்குறிச்சி வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க பொறுப்பாளர் அன்புரோஸ், வட்டப்பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.