கயத்தாறு, குரும்பூரில் மத்திய அரசை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
கயத்தாறு, குரும்பூரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு:
மத்திய அரசை கண்டித்து கயத்தாறு, குரும்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 86 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலைமறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கயத்தாறு பழைய பஸ்நிலையத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு தொழிலாளர் விவசாய சங்க செயலாளர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் ரஜினிமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், கிளைக் கழகச் செயலாளர் கோதண்டம், வட்டார விவசாய தொழிற்சங்க தலைவர் காசிராஜன், கோடங்கால் கிளை செயலாளர், மகளிரணி கலாவதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் கடம்பூர்சாலையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு சென்றடைந்தது. அங்கு அக்கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 56 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர்.
குரும்பூர்
இதேபோன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயக்குமார் தலைமையில் நேற்று குரும்பூர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்திலிருந்து மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் ஸ்டேட் பாங்க் முன்பு சென்றடைந்தது. அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் கரும்பன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 30 பேரை குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். இதனால் குரும்பூர்-ஏரல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.